டாபர்னீர் முதல் மெண்டலீவ் வரை
இந்த வகையில் 1817-ல் ஜோகன்டாபர்னீர், 1866-ல் ஜான் நியூலாந்த்ஸ் ஆகியோர் தனித்துவ விதிகளை உருவாக்கி அதுவரையிலான தனிமங்களை வரிசைப்படுத்த முயன்றனர். 1869-ல் ரஷ்ய வேதியியலாளரான டிமிட்ரி மெண்டலீவ் தனிம ஆவர்த்தன விதியை உருவாக்கினார். அணு நிறையின் அடிப்படையில் 56 தனிமங்களை வரிசைப்படுத்திக் காட்டினார். இதிலுள்ள சிலகுறைபாடுகள் படிப்படியாக களையப்பட்டு நிறைவாக உருவானதே தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன தனிம வரிசைஅட்டவணை.
நவீன அட்டவணை
நவீன தனிம வரிசை அட்டவணையில் தற்போது 118 தனிமங்கள் இடம்பிடித்துள்ளன. அனைத்து தனிமங்களும் அவற்றின் அணு எண்ணின் அடிப்படையில் கிடைமட்டமாக அமைந்த 7 ‘வரிசைகள்’ மற்றும் செங்குத்தாக அமைந்த 18 தொகுதிகளில் வகைப்படுத்தப்பட்டன. உலோகங்கள், அலோகங்கள், உலோகப் போலிகள், ஐசோடோப்புகள், லாந்தனைடுகள், ஆக்டினைடுகள், மந்தவாயுக்கள் உட்பட அனைத்தும் அவற்றுக்கான சரியான இடத்தில் தொகுக்கப்பட்டன. இந்த முறையானது தனிமங்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், ஒப்பிட்டு ஆராயவும் பெரிதும் உதவுகிறது. அட்டவணையின் தொடக்கமாக அணுஎண் 1 உடைய ஹைட்ரஜன் இடது மேல் மூலையில் இடம்பெற்றுள்ளது. 2002-ல் உருவாக்கப்பட்ட Oganesson தனிமம் அட்டவணையின் கடைசியாக வலது கீழ்மூலையில் இடம்பெற்றுள்ளது. இதன் அணு எண் 118.
மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியபோது எதிர்காலத்தில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ள பலதனிமங்களுக்கான இடங்களை காலியாக விட்டார். ஆனால், அந்த தனிமங்களின் பண்புகளை முன்கூட்டியே கூறியிருந்தார். பின்னாளில் தனிமங்கள் கண்டறியப்பட்டதும் காலி இடங்கள் நிறைவு செய்யப்பட்டன. டிமிட்ரி உருவாக்கிய அட்டவணைக்கும் தற்போதைய நவீன அட்டவணைக்கும் பல வேறுபாடுகள் உண்டு. எனினும் டிமிட்ரியின் அட்டவணையே நவீன தனிமை வரிசை அட்டவணைக்கு அடிப்படை ஆகும். டிமிட்ரி அணுஎடையின் அடிப்படையிலே தனிமங்களைத் தொகுத்திருந்தார். தற்போதைய நவீன அட்டவணை, அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டுள்ளது. டிமிட்ரி தொடங்கிய தனிம வரிசை அட்டவணை தொடர்பான ஆய்வுகள் அறிவியலில் குறிப்பாக வேதியியலில் பெரும் மாற்றங்கள் உருவாக காரணமாயின.
மெண்டலீவ் பெயரில் தனிமம்
தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியதற்காக டிமிட்ரி மெண்டலீவ் இரு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். சில காரணங்களால் அவருக்கு நோபல் கிடைக்காமல் போனது. ஆனால் அதைவிட வித்தியாசமான அங்கீகாரத்தை தனது காலத்துக்குப் பின்னர்பெற்றார். 101-வது தனிமத்துக்கு அவரது நினைவாக மெண்டலீவியம் எனபெயர் சூட்டப்பட்டது. தனிம வரிசை அட்டவணையின் தந்தை என்றும் மெண்டலீவ் நினைவுகூரப்படுகிறார். நிலவின் ஒரு பள்ளத்துக்கு மெண்டலீவ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனிம வரிசை அட்டவணைக்கு அப்பாலும் மெண்டலீவ் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டார். விவசாய உற்பத்திக்கான பல வகை உரங்கள் தயாரிப்பு, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, ரஷ்ய மெட்ரிக் அளவை முறைகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
உலகிலுள்ள 118 தனிமங்களில் 94 மட்டுமே இயற்கையில் கிடைப்பவை. ஏனைய 24-ம் ஆய்வுக் கூடங்கள் மற்றும் அணு உலைகளில் தயாராகின்றன. தனிம வரிசை அட்டவணையில் மொத்தம் 11 வாயுக்கள் உள்ளன. அவை ஹைட்ரஜன், ஹீலியம், நைட்ரஜன், ஆக்சிஜன், புளூரின், குளோரின், நியான், ஆர்கான், கிரிப்டான், ஸெனான், ரேடான் ஆகியவை. திரவத் தனிமங்கள் 6. அவை காலியம், புரோமின், சீசியம், பாதரசம், ஃபிரான்சியம், ரூபிடியம். திடத் தனிமங்கள் மொத்தம் 89 உள்ளன. பூமியில் உள்ள அஸ்டாடைன் என்ற தனிமம் மிகவும் அரிதானது. 28 கிராம் மட்டுமே உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். ஹீலியம் மட்டும் எந்த நிலையில் திடமாக மாறாது வாயுவாகவே இருக்கும். ஹீலியம் சூரியனில் இருப்பதை கண்டறிந்த பின்னரே அதன் இருப்பு பூமியில் உறுதி செய்யப்பட்டது. அறிவியலில் ‘தனிம வரிசை அட்டவணை’ தொடர்பாக இடம்பெற்றுள்ள பாடங்கள்: 10-ம் வகுப்பில் அலகு 8, 9-ம் வகுப்பில் அலகு 12, 8-ம் வகுப்பில் அலகு 4, 7-ம் வகுப்பில் அலகு 3
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.