வருகிறது `வாட்ஸ்அப் பே'... பேந்தபேந்த முழிக்கும் `பே டிஎம்'...`பே'யாட்டம் ஆடப்போகும் ஃபேஸ்புக்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

வருகிறது `வாட்ஸ்அப் பே'... பேந்தபேந்த முழிக்கும் `பே டிஎம்'...`பே'யாட்டம் ஆடப்போகும் ஃபேஸ்புக்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, எலெக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பே டிஎம் கொண்டாட்டத்தில் இருந்தது. இன்னொரு பக்கம் மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு உரியதாக மாறிப்போனது பே டிஎம். இந்நிலையில், இந்தியாவில் `வாட்ஸ்அப் பே' பணப்பரிவர்த்தனை முறையை முழுஅளவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு, பே டி.எம் நிறுவனத்துக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
ஆட்டத்துக்கு தயாராகும் வாட்ஸ்அப் பே "ஏற்கெனவே சோதனை அடிப்படையில் இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலம் சுமார் 10 லட்சம் பேர், பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பி, அது மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் இதுபோன்று பணம் அனுப்புவதற்காக உள்ள பேமென்ட் டேட்டாவுக்கு ஏற்றபடி எங்கள் பேமென்ட் ஸ்டோர் அமைப்பை மாற்றியமைத்துள்ளோம்" என்று வாட்ஸ் அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி வாட்ஸ் அப் பே முறையை இந்தியாவில் முழு அளவில் அமல்படுத்தும்போது, ரிசர்வ் வங்கியின் விதி முறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வோம் என அந்த நிறுவனம் உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து இன்னும்3 அல்லது 4 மாதங்களில் இச்சேவையை முழு அளவில் இந்தியாவில் தொடங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
`வாட்ஸ்அப்'பைக் கையகப்படுத்தியது, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் சக்கர் பெர்க். இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிக வேகமான வளர்ச்சியை எட்டிவருகிறது. 2023-ம் ஆண்டுவாக்கில் இந்தப் பரிவர்த்தனையின் மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் `வாட்ஸ்அப் பே' திட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சக்கர் பெர்க். அவரது இந்த அறிவிப்பு, இந்திய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவில் இந்தத் துறையில் செயல்பட்டுவரும் பே டிஎம் (சீனாவின் அலிபாபா நிறுவனம், இதில் 25 சதவிகிதப் பங்குகளைக்கொண்டுள்ளது), போன் பே, ஸ்நாப்டீல், ஃப்ரீசார்ஜ் போன்றவை `வாட்ஸ்அப் பே'வின் வருகையால் ஏறக்குறைய சந்தையிலிருந்து காணாமலேயேபோய்விடும் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள். ஏற்கெனவே அமேசான் நிறுவனம், அண்மையில்தான் இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்காக `அமேசான் பே' என்ற சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது. `கூகுள் பே'வை இந்தியாவில் சுமார் 4.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும், கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 81 பில்லியன் டாலர் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொருபுறம் ஆப்பிள் பேவும், மிகக் குறைந்த விலையிலான ஐபோன்களுடன் இந்தியாவில் இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்கத் தயாராகிவருகிறது. சர்வதேச அளவில் இந்த நிறுவனத்துக்கு சுமார் 39 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
பே டிஎம் எதிர்காலம் என்னவாகும்? ஆனால், `வாட்ஸ்அப் பே' இந்திய டிஜிட்டல் பணப்பரிவத்தனை துறைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டால், இவை எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்கிறார்கள் துறை நிபுணர்கள். ஏனெனில், `வாட்ஸ்அப்'புக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். கூடவே ஃபேஸ்புக்குக்கும் இன்னொரு 30 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இந்நிலையில், `வாட்ஸ்அப் பே' தொடங்கப்பட்டுவிட்டால், இந்த இரண்டு தரப்புப் பயன்பாட்டாளர்களும், மிக எளிதாக அதன் வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள். அப்படியான ஒரு நிலை ஏற்படும்போது, அது நிச்சயம் மற்ற எலெக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களைக்காட்டிலும், பே டிஎம் நிறுவனத்துக்குத்தான் மிகப்பெரிய அடியாக இருக்கும் என்கிறார்கள் துறை நிபுணர்கள். இந்த நிறுவனம், இந்தியாவில் தற்போது 23 கோடி சந்தாதாரர்களுடன் முதன்மை எலெக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை நிறுவனமாக உள்ளது. ``இந்தியர்கள் `வாட்ஸ்அப்'பை மிகவும் விரும்புகிறார்கள். இந்நிலையில், அந்த `ஆப்' மூலம் பணம் அனுப்புவது அவர்களுக்கு மிகவும் வசதியானதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாது தொழில்முனைவோர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும்கூட `வாட்ஸ்அப் பே' மூலம் தங்கள் பணப்பரிவர்த்தனையைச் செய்துகொள்வது ஒரு டிரெண்டாகவே மாற வாய்ப்புள்ளது என்கிறார் தொழில் நிறுவனங்களுக்கான ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ-வான ஹரீஷ்குமார். மேலும், இதன்மூலம் தனிநபர்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுப்பது மற்றும் பணம் அனுப்புவது எளிதாக இருக்கும் என்பதால், இதன் பயன்பாடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.
முன்னர் விட்டதை இப்போது பிடிக்கும் சக்கர் பெர்க் `பே டிஎம்'மின் நிறுவனரும் சிஇஓ-வுமான விஜய் சேகர் ஷர்மா, `வாட்ஸ்அப் பே'வின் வருகை நிச்சயம் தங்களுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். முன்னதாக 2016-ம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டுமே இலவச அடிப்படை சேவையைக் கொண்டுவரத் திட்டமிட்டது ஃபேஸ்புக் நிறுவனம். ஆனால், இணையதளத்தைப் பயன்படுத்துவதில் கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்ததைத் தொடர்ந்து, பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான சக்கர் பெர்க், அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். இதைக் குறிப்பிட்டு ட்விட்டரில் கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கைக் கடுமையாக விமர்சித்திருந்தார் விஜய் சேகர் ஷர்மா. இந்நிலையில், அப்போது விட்டதை இப்போது `வாட்ஸ்அப் பே' மூலம் பிடிக்க சக்கர் பெர்க் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, `வாட்ஸ்அப் பே'வின் வருகையால் `பே டிஎம்' காணாமல்போய்விடும் என்றரீதியில் ட்விட்டர்வாசிகள் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். `நிச்சயம் ஒரு போர் நடக்கவுள்ளது. அதைக் காண, நாங்கள் காத்திருக்கிறோம்' எனத் தொழில்முனைவோரான அஜய் என்பவர் பதிவிட்டுள்ளார். ரோஹித் என்ற ட்விட்டர்வாசி, ` `பே டிஎம்'முக்கு குளிர் ஜுரம் வந்துகொண்டிருக்கிறது' எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். தான்மே என்ற ட்விட்டர்வாசி, ` `பேடி.எம்' ஆத்மா சாந்தியடைய வாட்ஸ்அப் பே அஞ்சலி செலுத்துகிறது' என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews