பிளாஸ்டிக் கழிவுகள்தான் பள்ளிக் கட்டணம்' - அனைத்திலும் தனித்துத் திகழும் பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

பிளாஸ்டிக் கழிவுகள்தான் பள்ளிக் கட்டணம்' - அனைத்திலும் தனித்துத் திகழும் பள்ளி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் ஒரு தம்பதியால் நடத்தப்பட்டு வருகிறது அக்‌ஷர் மன்றம் என்ற பள்ளி. மெஸின் முக்தர் என்பவர் 2013-ம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து இந்தியா வந்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். பர்மிதா சர்மா என்ற சமூக ஆர்வலருடன் இணைந்து 2016-ம் ஆண்டு தான் நினைத்தது போலவே ஒரு பள்ளியைத் தொடங்கினார்.
ஏழை மாணவர்கள், பள்ளியிலிருந்து பாதியில் வெளியேறியவர்கள் போன்ற பலரும் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். அக்‌ஷர் மன்றம் சாதாரண ஒரு பள்ளியைப்போல் இல்லாமல் அனைத்து விதத்திலும் தனித்து திகழ்கிறது அங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எளிய முறையில் மரத்தால் ஆன வகுப்பறையிலேயே மாணவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர். அங்கு படிப்பைத் தாண்டிச் சுற்றுச்சூழல், நடனம், இசை, ஓவியம், கைவினைப் பொருள்கள், விளையாட்டு, புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூகம் சார்ந்த பல விஷயங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. வயதில் மூத்த மாணவர்கள்தான் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். அனைத்திலும் முக்கியமாக அந்தப் பள்ளியில் படிக்கக் கட்டணமாக, தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பைகளே வாங்கப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை அந்த பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வர வேண்டும்.
இது பற்றி பேசிய முக்தர், "பள்ளியில் படிக்க வசதியில்லாத சின்னஞ்சிறு பிள்ளைகள் பலரும் குவாரிகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வருகின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகத் தரமான கல்வி தர வேண்டும் என நாங்கள் முடிவு செய்து உருவாக்கியதுதான் இந்த அக்‌ஷர் மன்றம். இங்கு 4 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கவுஹாத்திக்கு அருகில் உள்ள பாமோஹி, போரகோன், கோர்ச்ஹுக் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் பள்ளியில் கட்டணமாக வாரம் ஒருமுறை பிளாஸ்டிக் பைகளைப் பெறுகிறோம். இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அவற்றை எரிக்கக் கூடாது மறுசுழற்சி செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை எளிதில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். எங்களுக்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்வோம். மீதமுள்ளவற்றைப் பள்ளியினுள்ளே அழகு செய்ய பயன்படுத்துவோம். மாணவர்களையும் அவர்களை வைத்துப் பெற்றோர்களையும் இனி பிளாஸ்டிக்கை எரிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளோம். மாணவர்கள் தங்களின் வீடுகளில் குறைவான அளவில் பிளாஸ்டிக்கை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இவரை அடுத்துப் பேசிய பர்மிதா சர்மா, "வறுமையைத் தடுக்கும் வகையிலும் அதை எதிர்த்துப் போராடும் வகையிலும் எங்கள் பள்ளியில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு செய்முறை பாடங்களே அதிகம் கற்பிக்கப்படும். வாரம் ஒருமுறை மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவோம். செய்முறை தேர்வின் மூலம் மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். நாங்கள் புதிதாக மேலும் ஒரு முயற்சியைக் கையில் எடுத்துள்ளோம். இதே போல் பள்ளி தொடங்க வேண்டும் என விரும்புவார்கள் எங்களிடம் வந்தால் நாங்கள் அவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிப்போம் அதை அவர்கள் தங்கள் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்திக்கொள்ளலாம். அந்தந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இதே போன்ற பள்ளி மிகவும் உதவும்' எனக் கூறியுள்ளார். இந்த பள்ளியைத் தொடங்கிய மெஸின் முக்தரும் பர்மிதா சர்மாவும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு தம்பதியாகப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews